நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ள நட்டத்தை, மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் சுமத்த அரசாங்கம் சதி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நுரைச்சோலையில் திட்டமிடப்பட்ட 810 மெகாவாட் மின்சாரத்திற்குப் பதிலாக, வெறும் 678 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதே இந்த உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணம் என அவர் விளாசியுள்ளார்.
நிலக்கரி மின் உற்பத்தி குறைந்ததால், அதிகச் செலவுடைய எரிபொருள் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மேலதிகச் செலவை ஈடுகட்ட, சுமார் 75 இலட்சம் மின் நுகர்வோர் மீது மின் கட்டண உயர்வை திணிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சஜித் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைச் காரணம் காட்டி, மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தரம் குறைந்த நிலக்கரி குறித்த உண்மையை மக்களுக்கு உடனே வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.