உலகின் முன்னணி வழிகாட்டி செயலியான கூகுள் மேப்ஸ் (Google Maps), ‘ஜெமினி’ (Gemini) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது சேவையை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. பயனர்கள் இனி வரைபடத்துடன் நேரடியாக உரையாடும் வசதி இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகமாகியுள்ள ‘Ask Maps’ பட்டனை அழுத்தி, பயனர்கள் தங்களின் பயணப் பாதை குறித்த எத்தகைய சிக்கலான கேள்விகளையும் கேட்கலாம். “செல்லும் வழியில் எங்கு நல்ல உணவகம் உள்ளது?”, “அங்கு வாகன தரிப்பிட வசதி (Parking) இருக்கிறதா?” என நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப துல்லியமான பதில்களை இந்தத் தொழில்நுட்பம் வழங்கும்.
கடந்த பத்தாண்டுகளில் கூகுள் மேப்ஸ் கண்ட மிகப்பெரிய மாற்றமாக ‘Immersive Navigation’ கருதப்படுகிறது. இது நீங்கள் செல்லும் பாதையைக் கட்டிடங்கள், மேம்பாலங்கள், சமிக்ஞைகள் மற்றும் மேடுபள்ளங்களுடன் கூடிய ஒரு தத்ரூபமான 3D காட்சியாக மாற்றிக் காட்டும். இதன் மூலம் வாகன ஓட்டுநர்கள் எவ்விதக் குழப்பமுமின்றித் துல்லியமாகப் பயணிக்க முடியும்.
இந்த ‘Ask Maps’ வசதி தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் விரிவாக்கப்படவுள்ளது. மாதந்தோறும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் கூகுள் மேப்ஸ், இனி வெறும் வரைபடமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் (Assistant) செயல்படப் போகிறது.