ஒன்லைன் மூலம் பொருட்களை வாங்கி ஏமாறும் நுகர்வோரைப் பாதுகாக்க, அனைத்து ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கூரியர் சேவை வழங்குநர்களுக்குப் புதிய பதிவு முறையை அறிமுகப்படுத்தப் போவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
உலக நுகர்வோர் உரிமைகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், ஒன்லைன் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் அதேவேளை, தரம் குறைந்த பொருட்களை வழங்கி நுகர்வோரை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, குறைந்த விலையில் பொருட்களை விளம்பரப்படுத்திவிட்டு, தரம் குறைந்த பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்புகளை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இனிமேல் ஒன்லைன் விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, பொருட்களை விநியோகம் செய்யும் கூரியர் நிறுவனங்களும் முறையான ஒரு சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. “நுகர்வோர் தங்களின் பணத்திற்குரிய தரமான பொருட்களைப் பெறுவதை உறுதி செய்வதே எமது நோக்கம்,” என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.