தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விவசாய குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை தொகுதியின் பணிகளை எதிர்வரும் 6 முதல் 8 வாரங்களுக்குள் நிறைவு செய்ய அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கலந்துரையாடலில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார்.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க, கடந்த ஆண்டு இந்தியப் பிரதமரும் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதியும் இணைந்து ஆரம்பித்து வைத்த இந்தத் திட்டம், இதுவரை நிறைவடையாமல் இருப்பது கவலைக்குரியது எனத் தெரிவித்தார். இத்திட்டத்தை மேலும் தாமதப்படுத்தாமல் முடிக்க அனைத்து தரப்பினரும் இணங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, கூரையிலிருந்து நீர் கசிதல், தரை மட்டம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் குளிரூட்டும் அமைப்பில் உள்ள குறைபாடுகள் ஆகியனவே இக்களஞ்சியசாலை தொகுதியில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் என மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் உதவிப் பொது முகாமையாளர் வி. ரத்னம் சுட்டிக்காட்டினார். இதில் குளிரூட்டும் அமைப்பில் உள்ள சிக்கலே பிரதானமானது என அவர் தெரிவித்தார்.
இதன்படி, பழுதடைந்த குளிரூட்டும் இயந்திரங்களை மாற்றுதல், ஈரப்பதன் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சீரமைத்தல் மற்றும் தேவையான குறைந்தபட்ச குளிரூட்டும் அளவைத் தீர்மானித்தல் ஆகியவற்றுக்கு இணக்கம் காணப்பட்டது.
நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில், திட்டத்தின் 99 சதவீதப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், குளிரூட்டும் அமைப்பில் மட்டுமே சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். அதனை 4 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மின் அழுத்த மாற்றங்கள் காரணமாக உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அவற்றை பொருத்துவதற்கு முன்னர் மின்னழுத்த நிலைப்படுத்தியை பொருத்துவதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
தம்புள்ளையில் விவசாய குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை பணிகள் 6–8 வாரங்களில் முடிவு