இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் பாரிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று (17) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
தற்போது தரம் 1 மாணவர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 2027-ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பாடவிதான மீளாய்வுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தரம் 1 மாணவர்களுக்கான ‘செயற்பாடு சார்ந்த’ (Activity-based) புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் பாடசாலை விடுமுறை முடிவடைந்ததும் அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி மதிப்பீடு மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்துப் பரிந்துரைகளை வழங்க, சர்வதேசக் கல்வி நிபுணர்கள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அத்துடன், கல்வித் துறையைக் கண்காணிக்க ‘தேசிய வழிகாட்டல் குழு’ ஒன்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி அமைக்கப்படவுள்ளது.