BREAKING NEWS

இந்தியப் பெருங்கடல் உலக அரசியலின் மையம்! நாமல் ராஜபக்ஷவின் விசேட உரை.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
இந்தியப் பெருங்கடல் உலக அரசியலின் மையம்! நாமல் ராஜபக்ஷவின் விசேட உரை.

வேகமாக மாறிவரும் உலக ஒழுங்கிற்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தியாவுடன் சீரான வெளியுறவுக் கொள்கையைப் பேணுவது இலங்கைக்கு அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

WION சர்வதேச உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய உலகம் தற்போது ஒரு பாரிய மாற்றத்தைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். “பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையிலிருந்து விடுபட்டு, தற்போது புவியியல் அமைவிடங்களே உலக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன,” என அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும்பகுதி மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்துகள் இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடைபெறுகின்றன. அத்துடன், உலகளாவிய டிஜிட்டல் தொடர்பாடல்களை இணைக்கும் கடலடி கேபிள்களும் இப்பிராந்தியத்திலேயே அமைந்துள்ளன. “இலங்கை இந்த முக்கிய கடல்சார் பாதைகளின் சந்திப்பில் அமைந்திருப்பது ஒரு பலம் என்றாலும், சீரான வெளியுறவுக் கொள்கை ஊடாகவே எமது இறையாண்மையைப் பாதுகாக்க முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.

21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மாற்றமாக இந்தியாவின் எழுச்சியைக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட சக்தியாக விளங்குவதாகப் பாராட்டினார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் (Blue Economy) போன்ற துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கை பெரும் நன்மையடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பு அவசியம் என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது அமைதி மற்றும் பகிரப்பட்ட செழுமை கொண்ட ஒரு வலயமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.