தமிழக சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதோடு, தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என தவெக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. “தமிழகத்தில் தவெக தனித்துப் போட்டியிடும்” என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பனையூர் அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (18) மாலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமான ‘இஃப்தார்’ நோன்புத் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, தவெக தலைவர் விஜய் அவர்கள் இன்று ஒருநாள் முழுவதும் இஸ்லாமிய முறைப்படி நோன்பிருந்து, மாலை இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டு தனது நோன்பைத் திறக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் விஜய் எடுக்கும் இந்த முயற்சி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.