கட்டார் மற்றும் பிராந்திய நாடுகள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் ஈரானிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் (Sheikh Tamim bin Hamad Al Thani) இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
இந்த உரையாடலின் போது, கட்டாரில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். அத்துடன், கட்டாருக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது இலங்கையின் முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
கட்டாரில் பணியாற்றும் மற்றும் வசிக்கும் இலங்கைச் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த கத்தார் அமீர், கட்டார் எல்லைக்குள் இருக்கும் இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் தமது அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக உறுதியளித்தார்.
தற்போதைய இராணுவ மோதல்கள் சர்வதேச எரிசக்தித் துறை (Energy Sector) மற்றும் விநியோகச் சங்கிலிகளில் (Supply Chains) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எத்தகைய நெருக்கடி நிலையிலும், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குத் தடையின்றி எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்தும் ஒரு நம்பகமான பங்காளியாக கட்டார் தொடர்ந்து செயற்படும் என அமீர் இதன்போது உறுதியளித்தார்.
பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கவும், இராஜதந்திர ரீதியில் அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இரு தலைவர்களும் இணக்கம் கண்டனர்.