முகப்புத்தகத் (Facebook) தளத்தில் காணொளிகளை உருவாக்கும் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் மெட்டா (Meta) நிறுவனம் “Creator Fast Track” எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள உருவாக்குநர்களுக்கு மாதம் 3,000 அமெரிக்க டொலர் வரை நிச்சயிக்கப்பட்ட வருமானம் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டமானது ஏற்கனவே பிரபலமான கலைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள ரீல்ஸ் (Reels) காணொளிகளின் சென்றடைவு (Reach) அதிகரிக்கப்படுவதோடு, முதல் மூன்று மாதங்களுக்கு உறுதியான ஊதியமும் வழங்கப்படவுள்ளது. இது கலைஞர்கள் தங்களது பார்வையாளர்களை மிக விரைவாக அதிகரிக்க உதவும் என மெட்டா தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், டிக்டாக் அல்லது யூடியூப் தளங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள் மாதம் 3,000 டொலர் வரை ஈட்ட முடியும்.
குறைந்தது ஒரு இலட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட கலைஞர்கள் மாதம் 1,000 டொலர் வரை வருமானம் பெற முடியும்.
இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு முகப்புத்தகத்தின் ஏனைய பணமாக்கல் கருவிகளை (Monetisation Tools) உடனடியாகப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆரம்பத் திட்டம் முடிந்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் மெட்டா நிறுவனம் உருவாக்குநர்களுக்குச் சுமார் 3 பில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 35% அதிகமென்பதுடன், வரலாற்றில் மெட்டா வழங்கிய அதிகபட்ச வருடாந்தக் கொடுப்பனவு இதுவாகும்.