‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டு மாதங்கள் கடந்தும், அடிப்படை வசதிகளின்றித் தவிக்கும் மலையகத் தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (19) நடைபெற்றது.
மலையகப் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலும், பாதுகாப்பற்ற இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். நிரந்தர வீடமைப்பு, காணி உரிமை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ‘மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூக கூட்டமைப்பு’ (CCMR) இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தாம் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். மீள்கட்டமைப்புப் பணிகளில் நிலவும் மந்தகதியைச் சுட்டிக்காட்டியதுடன், வீடமைப்பு மற்றும் காணி உரிமைகளை வலியுறுத்தித் தயாரிக்கப்பட்ட விசேட கோரிக்கை ஆவணம் ஒன்றும் இதன்போது முன்வைக்கப்பட்டது. குறித்த ஆவணம் எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நேடியாகக் கையளிக்கப்படவுள்ளது.
மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் அனைத்தும் அரசியல் பேதங்களைக் கடந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அவசர அழைப்பும் இந்தச் சந்தர்ப்பத்தில் விடுக்கப்பட்டது.