முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (20) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதிவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணைப் கோப்புகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அத்துடன், அதன் முன்னேற்றத்தை அறிவிப்பதற்கு மற்றுமொரு தினத்தை வழங்குமாறும் அவர்கள் கோரினர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான், இந்த முறைப்பாட்டை ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைப் பணிகளின் முன்னேற்றத்தை நீதிமன்றிற்கு அறிவிக்குமாறும் ஆணைக்குழுவிற்கு கட்டளையிட்டார்.
2023 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மனிதவள அதிகாரிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளைத் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தி ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.