மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான இராணுவ இலக்குகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
“மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாரிய இராணுவ முயற்சிகளைக் குறைத்துக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எமது நோக்கங்களை அடைவதற்கு மிக நெருக்கமாக உள்ளோம்,” என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) குறித்துப் பேசுகையில், “அமெரிக்கா அந்தப் பாதையைப் பயன்படுத்துவதில்லை; எனவே அதனைப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளே அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, கடலில் தேங்கியுள்ள ஈரானிய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்க திறைசேரி (US Treasury) தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இந்தத் தற்காலிக அனுமதி மூலம் சுமார் 140 மில்லியன் பேரல் எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வரும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெரும்பாலான நாடுகள் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.