தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கோரப்படும் தகவல்களை, ‘தேசிய பாதுகாப்பு’ என்ற போர்வையில் ஒட்டுமொத்தமாக மறுக்க முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
2022 ஜூலை போராட்டக் காலப்பகுதியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ‘எஸ்.எல்.என்.எஸ் கஜபாஹு’ (SLNS Gajabahu) கப்பலில் ஏறியது தொடர்பான விபரங்களை ஏ.ஏ.எம்.ஆர் அலி என்பவர் கோரியிருந்தார். குறிப்பாக, அந்தப் பயணத்திற்கான செலவு மற்றும் அதற்கான நிதியை வழங்கியது யார்? என்ற விபரங்களே கோரப்பட்டிருந்தன.
இந்த விபரங்களை வழங்கத் தவறிய கடற்படை, அதற்கு எதிராகத் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு வழங்கிய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு கடற்படையின் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
நிதி விபரங்களை வெளியிடுவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கடற்படை நிரூபிக்கத் தவறிவிட்டது.
‘தேசிய பாதுகாப்பு’ என்பது தகவல்களை வழங்காமல் இருப்பதற்கான ஒரு பொதுவான கருவியோ அல்லது மறைவிடமோ கிடையாது.
சட்டப்பூர்வமான ஆதாரங்கள் இன்றி தகவல்களை மறுப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தைப் பாதிக்கும்.
இதற்கமைய, கோரப்பட்ட நிதி விபரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஏற்கனவே வழங்கிய உத்தரவை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.