பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தேவையற்ற தலையீடுகளே தான் பதவியை இராஜினாமா செய்ய முக்கிய காரணம் என முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேரி கிர்ஸ்டன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
TalkSPORT ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் பேசிய அவர், “பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலையீட்டு அளவை நான் முன்னெப்போதும் கண்டதில்லை. இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில், வீரர்களுடன் இணைந்து ஒரு திட்டத்தை முன்னெடுப்பது பயிற்றுவிப்பாளருக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
அணி சரியாக விளையாடாத போது, முதலில் பயிற்றுவிப்பாளரையே குறிவைப்பார்கள் எனச் சுட்டிக்காட்டிய கிர்ஸ்டன்,”அணி தோல்வியடையும் போது பயிற்றுவிப்பாளரை நீக்குவது அல்லது அவருக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது மிகவும் எளிதான காரியம். ஆனால் இது அணியின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவாது,” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
2024 ஏப்ரல் மாதம் இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைந்த கிர்ஸ்டன், சபையுடனான மோதல் காரணமாக வெறும் 6 மாதங்களிலேயே தனது பதவியை உதறினார். இவருக்குப் பின் நியமிக்கப்பட்ட ஜேசன் கில்லஸ்பியும் (Jason Gillespie) இதே போன்ற காரணங்களால் சில மாதங்களிலேயே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.