இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷானக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் (IPL) தொடரில் காயமடைந்த வீரர்களுக்கு மாற்றீடாக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் சில முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்குப் பதிலாகப் புதிய வீரர்களைத் தேடும் பணிகளில் ஐபிஎல் அணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தசுன் ஷானக சில முன்னணி அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரர் சாம் கர்ரன் (Sam Curran) காயமடைந்துள்ளதால், அவருக்குப் பதிலாக அதே போன்ற திறமைகளைக் கொண்ட தசுன் ஷானகவை அந்த அணி ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட தசுன் ஷானகவின் இந்த திடீர் முடிவு, அவர் மீண்டும் ஐபிஎல் களத்தில் அதிரடி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பை இரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.