இலங்கையின் கல்வி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, சர்வதேச தரத்திற்கு இணையான புதிய மதிப்பீட்டு முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் உலகப் புகழ்பெற்ற கல்வி மதிப்பீட்டு நிபுணர் பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் (Luke William Harding) ஆகியோருக்கிடையில் இசுருபாயவில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
6-ஆம் தரத்திலிருந்து ‘பாடவிதானம் ‘ (Module) அடிப்படையிலான புதிய மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது மாணவர்களின் உண்மையான திறமைகளை இனங்காண உதவும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பரீட்சை அழுத்தங்களைக் கொடுக்காமல், கற்றல் செயல்பாடுகளைத் தரமான முறையில் மதிப்பீடு செய்யப் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.
மார்ச் 25 வரை இலங்கையில் தங்கியிருக்கும் பேராசிரியர் ஹார்டிங், பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவக அதிகாரிகளுடன் இணைந்து ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.