இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு இராணுவ நடவடிக்கை: 34-வது நாளில் போர்! முக்கிய திருப்பங்கள்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து முன்னெடுத்து வரும் கூட்டு இராணுவ நடவடிக்கை இன்று (02) 34-வது நாளை எட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஐந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து தாம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஈரான் ஏற்கனவே ஹோர்மூஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியுள்ளதால், பாரசீக வளைகுடாவில் கடல் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, செங்கடல் கப்பல் போக்குவரத்துப் பாதைக்கும் ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இது உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியில் பாரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரானின் ‘புதிய ஆட்சியின் ஜனாதிபதி’ போர்நிறுத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் புதிய தலைமை இக்கட்டான சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்கத் தரப்பு நம்புகிறது.
எனினும் ட்ரம்ப்பின் கருத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.
போர்நிறுத்தம் கோரியதாகக் கூறப்படும் தகவல் “முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது” என ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.