ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த சந்தேக நபர் ஒருவருக்கு, ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் இன்று (02) ரூ. 91,100 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
நல்லதண்ணி சிவனொளிபாத வீதியிலுள்ள ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த குற்றச்சாட்டில், ஹட்டன் வனத்துறை அதிகாரிகளால் நேற்று (01) சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அபராதத்துடன் தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தத் தீயினால் சுமார் 5 ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது. ஹட்டன் வனத்துறை, மஸ்கெலியா விசேட அதிரடிப்படை மற்றும் நல்லதண்ணி பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மலையகத்தில் நிலவும் வரட்சியான காலநிலையைப் பயன்படுத்தி காடுகளுக்குத் தீ வைப்பவர்களைக் கைது செய்ய பொலிஸாருடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வன அதிகாரி வி.ஜே.ருக்ஷன் தெரிவித்துள்ளார்.