மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டு விவசாயிகளுக்குத் தடையின்றி உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தற்போதுள்ள உரக் கையிருப்புகளை மாவட்ட ரீதியாக முறையான முகாமைத்துவத்துடன் விநியோகிப்பதை உறுதிப்படுத்துமாறும், உர இறக்குமதியில் நிலவும் தடைகளை நீக்க மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி உரங்களை மறைத்து வைப்போர் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வோரைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட உரங்களை விவசாய அபிவிருத்தி திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யுத்தச் சூழல் நிலவாத நாடுகளுடன் கலந்துரையாடி, மாற்றுப் பாதைகள் ஊடாக உரங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.