BREAKING NEWS

மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!

குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி இருப்பதாகக் கருதப்பட்ட இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள், எந்தவொரு மனித எச்சங்களும் கண்டறியப்படாத நிலையில் நேற்று (ஏப்ரல் 03) நிறைவடைந்தது.

களுவாஞ்சிக்குடி நீதிவான் டி. பிரதீபன் அவர்களின் நேரடி மேற்பார்வையில், கடந்த மார்ச் 30 முதல் மூன்று நாட்களாக இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வுப் பகுதியில் மணற்பாங்கான தன்மை மற்றும் நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக இருந்ததால் பணிகள் சவாலாக அமைந்தன. இருப்பினும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

2014-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், 2015-இல் ‘ரேடார்’ (GPR) மூலம் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க ஆய்வுகளின் தொடர்ச்சியாகவே, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வு தற்போது நடத்தப்பட்டது.

தற்போது ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் ஆதாரங்கள் கிடைக்காததால் பள்ளம் மூடப்பட்டுள்ளது. எனினும், அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் சாத்தியமான இடங்கள் உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தொடரும் என ஆட்கள் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) தெரிவித்துள்ளது.

அகழ்வு பணிகள் நடைபெற்ற போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் அங்கிருந்து பணிகளை நேரடியாக அவதானித்ததுடன், எவ்வித முடிவுகளும் இன்றிப் பணிகள் நிறைவடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.