பங்களாதேஸ் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவி வந்த தொடர் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் பங்களாதேஸ் கிரிக்கெட் சபையின் (BCB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக பங்களாதேஸில் நிலவிய அரசியல் கொந்தளிப்பு மற்றும் நிர்வாக சீர்குலைவு காரணமாக, ஏற்கனவே இருந்த அமினுல் இஸ்லாம் புல்புல் தலைமையிலான நிர்வாகத்தை, தேசிய விளையாட்டு பேரவை (NSC) செவ்வாயன்று அதிரடியாக நீக்கியது. புதிய தேர்தல் நடைபெறும் வரை, அன்றாடப் பணிகளைக் கவனிக்க தற்காலிகக் குழு (Ad-hoc committee) ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் போது, இந்தியாவிற்கு எதிரான ஆசிப் நஸ்ருலின் இந்தியா எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு (பங்களாதேஸ் அணி இந்தியா செல்லாதவாறு தடுத்தது) அமினுல் இஸ்லாம் புல்புல் மௌனம் காத்திருந்தமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், போட்டிகளை இலங்கைக்கு மாற்றியமைத்த ஆசிப் நஸ்ருலின் முடிவை எதிர்க்கத் தவறியது.
இந்த விவகாரங்களால் அதிருப்தியடைந்த சபையின் ஆறு இயக்குநர்கள் அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இத்தகைய இக்கட்டான சூழலில், கிரிக்கெட் நிர்வாகத்தைத் திறம்பட வழிநடத்தும் பொறுப்பு தமிம் இக்பாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.