“ஈரான் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது; இனி ஹோர்முஸ் நீரிணை தானாகவே திறக்கப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு புறப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் ஊடகங்களிடம் பேசியதாவது:
“ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக சிதைக்கப்பட்டுவிட்டன. அவர்களின் தலைமைத்துவமும் பலமிழந்துவிட்டது. இனி அவர்கள் எங்களை எதிர்க்க முடியாது.” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும் உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தை நிர்ணயிக்கும் ஹோர்முஸ் நீரிணையை சர்வதேச விதிகளுக்கு மாறாக ஈரான் முடக்கி வைக்க முடியாது. கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்க மாட்டோம். மிக விரைவில் அந்தப் பாதை திறக்கப்படும். “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன செய்வது என்ற ‘பேக்-அப் பிளான்’ (Backup Plan) எங்களுக்குத் தேவையில்லை. ஈரானிடம் இப்போது மிகக் குறைவான ஏவுகணைகளே மிஞ்சியுள்ளன. எமது இராணுவம் தனது வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டது எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்தப் பாதையை முடக்கியிருந்தது. தற்போது 14 நாள் போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் நீடிக்கிறது. இந்தச் சூழலில், ட்ரம்பின் இந்த ஆக்ரோஷமான பேச்சு மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.