பல்கலைக்கழக பீடாதிபதிகள் – துறைத் தலைவர்கள் நியமனங்கள் அரசியற்படுத்தப்படுவது பாரிய ஆபத்தாகும்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களின் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமான 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள ஏற்பாடுகளை முடக்குவது சட்டவிரோதமானது மாத்திரமன்றி, அது முறையற்ற செயலுமாகும். பல்கலைக்கழக பேரவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இயங்கும் சுயாதீன பல்கலைக்கழக கட்டமைப்பின் செயல்பாட்டிற்கு இந்தத் தீர்மானம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தினால் திருத்தப்பட்ட, 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 49 வது பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் பீடாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் மற்றும் சட்டத்தின் 51 வது பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் கல்வித்துறைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளை திருத்தம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களால் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தினால் பல்கலைக்கழகங்களின் கல்விச் சுதந்திரம் பாரியளவில் மட்டுப்படுத்தப்படும். முழுப் பல்கலைக்கழக கட்டமைப்பும் வெட்கக்கேடான அரசியற்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதோடு, அதன் சுயாதீனத்தன்மையும் பறிக்கப்படும்.

இதன் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனது விருப்பப்படி பீடாதிபதிகளையும், துறைத் தலைவர்களையும் நீக்க முடியும். சமீப காலங்களில் துணைவேந்தர்களை நீக்குவதற்கும் இவ்வாறே அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிரேஷ்டத்துவம் அல்லது நிர்வாக அனுபவங்களைக் கருத்தில் கொள்ளாமல், அரசியல் தேவைகளுக்காகத் தமது கைக்கூலிகளை பல்கலைக்கழகக் கல்வியின் ஒவ்வொரு முக்கிய பதவிகளுக்கும் நியமித்துக் கொள்ள இதன் மூலம் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் மூலம் பல்கலைக்கழக கட்டமைப்பின் சுயாதீனமான இயங்குதலுக்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்புகள் இதன் மூலம் மீறப்படுவதுடன், அரசியல் தேவைக்கேற்ப ஒரு பொம்மை ஆட்சியை (Puppet control) முன்னெடுக்கும் வாய்ப்பு கல்வி அமைச்சுக்குக் கிடைக்கின்றது.

கல்விச் சுதந்திரத்தையும் பல்கலைக்கழக சுயாதீனத்தையும் அழிக்கும் இந்தப் புதிய திருத்தங்களைத் தோற்கடிப்பதற்கு, இலவசக் கல்வி உரிமையை மதிக்கும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ‘Free Lawyers’ அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சட்டத்தரணி அதுல டி சில்வா

இலங்கை சினிமா