நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அனர்த்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளும் உயர்மட்ட அரச நிறுவனங்களும் பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்பீடுகள் மற்றும் வரப்பிரசாதங்களைக் குறைத்து அந்தப் பணத்தை மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை கட்டியெழுப்பும் பணி அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு தாம் சில யோசனைகளை முன்வைப்பதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகைகளை நீக்கி, அந்தப் பணத்தை நிவாரண நிதியமொன்றில் வைப்பிலிட வேண்டும் எனத் தெரிவித்தார்.அதேபோல், அரசியல்வாதிகளுக்காக ‘டபுள் கேப்’ (Double Cab) வாகனங்களை இறக்குமதி செய்ய ஒதுக்கப்பட்டுள்ள நிதியையும் இத்தருணத்தில் நாட்டை கட்டியெழுப்பும் நிதியத்திற்கு வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.அரச நிறுவனங்களின் விரயங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் பின்வருமாறு கூறினார்:”ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற நட்டமடையும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்தப் பணத்தை தற்போது பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.”இலங்கையின் தற்போதைய டொலர் இருப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கருணாநாயக்க அவர்கள், கையிருப்புகளை செலவிடுவதற்கேற்ப அவற்றை மீண்டும் நிரப்புவதற்கான முறைமை இல்லாதது பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டினார்.எனவே, ஏற்றுமதிகளை விரைவாக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அத்துடன், எரிபொருளை நம்பியிருக்கும் மின்சார உற்பத்திக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு செலாவணியைச் சேமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் இதுவரையில் போதுமான வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு வெளிப்படுத்தினார்.சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆறாவது தவணை டிசம்பர் மாதம் பெறப்பட வேண்டியிருந்ததை நினைவுபடுத்திய அவர், அவசரக் கடன்களைப் பெறும் முறையை விட தவணை முறையில் சலுகைகளைப் பெறுவது நாட்டிற்குச் சாதகமானது எனத் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்துடன் கையாள்வதில் அரசாங்கம் பின்பற்ற வேண்டிய கொள்கை குறித்து அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்:”IMF ஐ ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்திருந்தாலும், நாம் அங்கு மண்டியிட வேண்டிய அவசியமில்லை. சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றாலும் நமது முதுகெலும்பை நிமிர்த்திச் செயற்பட வேண்டும். அங்கு மண்டியிடத் தேவையில்லை.”

இலங்கை சினிமா