நாட்டின் பொருளாதார நெருக்கடியாலும், இயற்கைச் சீற்றங்களாலும் ஏற்கனவே சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் மக்களுக்குப் பேரிடியாக, புதிய ஆண்டின் முதல் காலாண்டிலேயே மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்: இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள இந்தத் திட்டத்தின்படி, மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏழை மக்களின் கட்டணங்கள் பெருமளவு அதிகரிக்கப்படவுள்ளன:

0 – 30 யூனிட்கள்: ரூபா 4.50 இலிருந்து ரூபா 5.29 ஆக உயர்வு.

31 – 60 யூனிட்கள்: ரூபா 8 இலிருந்து ரூபா 9.41 ஆக உயர்வு.

91 – 120 யூனிட்கள்: ரூபா 24 இலிருந்து ரூபா 28 ஆக உயர்வு.

காரணங்கள் என்ன? மழைவீழ்ச்சி குறைவு, மின்சார சபையின் கடன் சுமை, எரிபொருள் விலை மாற்றம் மற்றும் ஊழியர் இழப்பீட்டுத் தொகையை ஈடுகட்டவே இந்த விலை உயர்வு என மின்சார சபை சாக்குப்போக்குகளை முன்வைத்துள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த விலை திருத்த காலத்தை 6 மாதங்களாக நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடுமையான எதிர்ப்பு: சமீபத்தில் வீசிய டிட்வா (Titwa) சூறாவளியால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரமின்றி நிர்க்கதியாகியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு “மக்களைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “நாட்டைக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களை ஏழ்மையின் விளிம்பிற்குத் தள்ளுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.

வெள்ளத்தாலும் சூறாவளியாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் வேளையில், அரசின் இந்த ‘மின்கட்டண அதிர்ச்சி’ பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சினிமா