BREAKING NEWS

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்

PR
priya priya punidha in Latest Updates
Report
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த  வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசர நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. 

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று வர்த்தகர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் மொத்தம் 300,000 ரூபாய் அபராதம் விதித்து வெலிசர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், குறித்த வர்த்தகர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதன்போது, ஜா-எல, ஏக்கல பகுதியில் கீரி சம்பா அரிசியை ஒரு கிலோகிராம் 308 ரூபாய்க்கும் அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஜா-எல பொதுச் சந்தையில் சம்பா அரிசியை ஒரு கிலோகிராம் 275 ரூபாய்க்கும் அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

கந்தானையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி கீரி சம்பா அரிசியை ஒரு கிலோகிராம் 280 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

சந்தையில் நியாயமான நடைமுறைகளைப் பேணுவதும், நுகர்வோரை அதிகப்படியான விலை உயர்விலிருந்து பாதுகாப்பதும் தமது பிரதான நோக்கம் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.