BREAKING NEWS

கல்வி மறுசீரமைப்பில் மாற்றம் இல்லை பிரதமர் உறுதி

PR
priya priya punidha in Latest Updates
Report
கல்வி மறுசீரமைப்பில் மாற்றம் இல்லை பிரதமர் உறுதி

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய மிக முக்கியமான துறையாகக் கல்வித்துறை இலக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சமூக மாற்றங்களைச் செய்யும்போது சிலரின் எதிர்ப்புகள் எழக்கூடும் எனவும், எவ்வாறாயினும் சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

தவறுகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்த்துக்கொண்டு செல்லும் புதிய கல்வி முறைமையில், சிறுவர்களுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பாதுகாக்கப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொழிற்கல்விக்காக அதிகளவான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்த கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் டிஜிட்டல் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தரம் 6 கல்வி மறுசீரமைப்புகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியதன் மூலம் அநீதிக்குள்ளான மாணவர்களுக்கு விரைவில் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மாற்றத்தை நோக்கி கல்வியைக் கொண்டு செல்லும் இப்பயணத்தில், அதற்கான மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.