மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவர்களின் மதிய உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட ஆறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இந்தத் தகவலை வடமத்திய மாகாண பிரதம செயலாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தின் பின்னணிகடந்த 2022ஆம் ஆண்டு, அரசாங்கத்தினால் ஒரு மாணவனின் மதிய உணவுக்காக தலா 100 ரூபா வீதம் ஒதுக்கப்பட்டது. இதன்படி, குறித்த பாடசாலையின் 720 மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 72,000 ரூபா நிதியை, அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் விருந்துக்காகப் பயன்படுத்தியுள்ளார். பாடசாலைக்கு மதிய உணவு வழங்கும் நபரைக் கொண்டே, பால்சோறு மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பெற்றோர்கள் மாகாணக் கல்வி அலுவலகத்தில் முறையிட்டிருந்தனர்.
சர்ச்சைக்குரிய பதவி உயர்வுஇந்த ஊழல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே, குறித்த அதிபர் கல்வி நிர்வாக சேவைக்கு (SLEAS) பதவி உயர்வு பெற்றுள்ளார். அண்மையில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் பின்னணி குறித்த குற்றச்சாட்டுகுறித்த அதிபரின் கணவர் ஆளுங்கட்சியின் பலம் வாய்ந்த அரசியல் செயற்பாட்டாளர் என்பதால், அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த பதவி உயர்வு பெறப்பட்டிருக்கலாம் எனப் பிரியந்த பெர்னாண்டோ சந்தேகம் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் நிலுவையில் இருக்கும்போது, ஒருவருக்கு எவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர் மீதான ஆறு ஊழல் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.