2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் , சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதன்படி இன்று ஜனவரி (21), பங்களாதேஷ் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடுமா அல்லது விலகுமா என்பதை இன்றைய தினத்திற்குள் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை கெடு விதித்துள்ளது. 

ஒருவேளை பங்களாதேஷ் வர மறுத்தால், அவர்களுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியைத் தொடரில் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் அசிப் நஸ்ருல், “இந்தியாவுக்கு அடிபணிந்து சர்வதேச கிரிக்கெட் பேரவை கொடுக்கும் நியாயமற்ற அழுத்தங்களை நாங்கள் ஏற்க மாட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக தனது அதிருப்தியைத் அவர் தெரிவித்தார். 

அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தபோது, சர்வதேச கிரிக்கெட் பேரவை அந்த இடங்களை மாற்றியது.

அதேபோன்ற ஒரு நியாயமான காரணத்திற்காகவே தாம் இப்போது இடமாற்றம் கேட்பதாக அசிப் நஸ்ருல் கூறியுள்ளார். 

மேலும் பங்களாதேஷ் அணியை நீக்கிவிட்டு ஸ்கொட்லாந்து அணியை சேர்க்கப்போவதாக தமக்கு எவ்வித அதிகாரப்பூர்வமான தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். 

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் பதில் சொல்ல மறுத்துவிட்டார். 

“இதைப் பற்றி பேசுவது பாதுகாப்பானது அல்ல (Not Safe)” என்று மட்டும் கூறி அவர் மழுப்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சினிமா