அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை ஆரம்பித்த பணிபுறக்கணிப்பு போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 7 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளது. 

நேற்று இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மேற்கொண்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே துரித விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உறுதியளித்துள்ளது. 

சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, ஒரு வார காலத்திற்குள் பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உடன்பாடு எட்டப்பட்டது. 

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஊடக அறிக்கை தொடர்பிலும் உடனடி விசாரணை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 

வாக்குறுதியளிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் இந்த இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபை எச்சரித்துள்ளது. 

சுகாதாரத் துறையில் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் கதிரியக்கச் சேவைகளை வழமை போல நோயாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். 

நேற்று போராட்டத்தினால் நோயாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்குப் பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சினிமா