கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது.
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மீறல், அதிகாரம், அரசாங்க வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்காக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள், நியமனங்கள் மற்றும் கொள்முதல் வழிகாட்டல்களை மீறுதல், அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள், முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள், மேற்கூறிய செயல்களால் அரசாங்கத்தின் சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டங்கள் மற்றும் சேதங்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையை மூன்று மாதங்களுக்குள்ளும், முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள்ளும் ஜனாதிபதி செயலாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
இது தொடர்பான ஏதேனும் எழுத்துமூல முறைப்பாடுகள் அல்லது தகவல்களைச் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் ஆணைக்குழுவின் செயலாளருக்கு “இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து முறைப்பாடுகளும் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அத்தகைய முறைப்பாடுகள் அல்லது தகவல்களை வழங்குபவர்களின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை அனைத்துச் சமர்ப்பிப்புகளிலும் குறிப்பிடப்பட வேண்டும்.
மேலும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனின், அது தொடர்பில் ஆணைக் குழுவிடம் கோர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவிடம் வாய்மூலச் சமர்ப்பிப்புகளைச் செய்ய விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை