அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான ‘சமாதானச் சபை’ (Board of Peace) இல் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டின் ஒரு அங்கமாக, இந்த அமைப்பை ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 

காசாவின் மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய ரீதியில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், ட்ரம்ப் இந்த ‘சமாதானச் சபையை’ உருவாக்கியுள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான துருக்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளார். 

இந்தச் சபையில் இணையுமாறு இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பிருப்பதாகக் கருதும் இந்தியா, இந்த அழைப்புக்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவிலை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், பாகிஸ்தான் இந்தச் சபையில் இணைக்கப்பட்டுள்ளமைக்கு இஸ்ரேல் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 

காசாவின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் இராணுவத்தினர் நிலைகொள்வதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என இஸ்ரேலிய அமைச்சர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். 

இந்த அமைப்பின் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் செயற்படுவார் என்றும், அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினாலும், அவராகப் பதவி விலகும் வரை அல்லது இயலாத நிலை ஏற்படும் வரை தலைவராக நீடிக்க முடியும் என அதன் சாசனம் கூறுகிறது. 

இந்த சபையில் உறுப்பினர்களைச் சேர்ப்பது, நீக்குவது மற்றும் புதிய கிளை அமைப்புகளை உருவாக்குவது போன்ற முழுமையான அதிகாரங்கள் தலைவரிடமே இருக்கும். 

மேலும், அமெரிக்கா, பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் துருக்கி, அர்ஜென்டினா, இந்தோனேசியா, ஹங்கேரி மற்றும் இஸ்ரேல் போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் இணைந்துள்ளன. எனினும், பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் சீனா போன்ற நாடுகள் இதில் இணைய மறுத்துவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சினிமா