தொழில் தீர்ப்பாயங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், நீதிச் சேவை ஆணைக்குழு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தொழில் தீர்ப்பாயத் தலைவர்கள் தங்களது வருடாந்த ஊதிய உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீர்ப்புகளை வழங்க வேண்டியது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழில் தீர்ப்பாயத் தலைவர்கள் வருடாந்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கு தகுதி பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட ஆண்டில் குறைந்தபட்சம் 45 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட வருடாந்த ஊதிய உயர்வுக்கான விண்ணப்பங்கள், ஊதிய உயர்வு கிடைக்க வேண்டிய திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கடந்த ஜனவரி 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையின் விதிகள் அனைத்தும் எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் துரிதமாகக் கையாள்வதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவான நீதியைப் பெற்றுக்கொடுப்பதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.