BREAKING NEWS

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி பங்களிப்பு: 47 நாடுகள் உதவி

PR
priya priya punidha in Latest Updates
Report
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி பங்களிப்பு: 47 நாடுகள் உதவி

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். 

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் தகவல்படி, இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நிதிப் பங்களிப்பு 8.5 பில்லியன் ரூபாவையும் கடந்துள்ளது. 

சுனாமிக்கு பிந்தைய மீள்கட்டமைப்பு போன்றே, இந்தச் சூறாவளி அனர்த்தத்தின் பின்னரும் சர்வதேச நாடுகள் இலங்கைக்குப் பெரும் ஆதரவை வழங்கியுள்ளன. 

வெளிநாடுகளிலிருந்து இதுவரை 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக நிதி கிடைத்துள்ளது. 

இதில் அதிகூடிய நிதிப் பங்களிப்பை அமெரிக்கா வழங்கியுள்ளதுடன், அந்தத் தொகை ஒரு பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது. 

இலங்கைக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட 47 நாடுகள் நிதி மற்றும் உதவிகளை வழங்கியுள்ளன. 

நிதி உதவிகளுக்கு மேலதிகமாக, பெருமளவிலான நிவாரணப் பொருட்கள் இலங்கை சுங்கத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. 

இவ்வாறு கிடைத்துள்ள பொருட்களின் மொத்தப் பெறுமதி 2.3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிதியானது மிகவும் வெளிப்படையான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைக் கட்டியெழுப்புவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.