BREAKING NEWS

இலங்கை மற்றும் வெனிசூலா வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே தொலைபேசி உரையாடல்

PR
priya priya punidha in Latest Updates
Report
இலங்கை மற்றும் வெனிசூலா வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே தொலைபேசி உரையாடல்

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசூலா வெளிவிவகார அமைச்சர் ஐவன் கில் பிண்டோவுடன் (Ivan Gil Pinto) தொலைபேசி வாயிலாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தமது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இருப்பினும், இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட கருத்துக்கள் அல்லது விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்த மேலதிக விபரங்கள் அந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.

வெனிசுவேலாவில் அண்மைக் காலமாக நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்புச் சூழல்கள் சர்வதேச ரீதியில் பெரும் அவதானத்தைப் பெற்றுள்ளன.

இத்தகையதொரு பின்னணியில் இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வெனிசுவேலாவின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக கடந்த ஜனவரி 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச சட்டக் கொள்கைகளை இலங்கை பின்பற்றுவதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது.

குறிப்பாக, நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை, சர்வதேச சிக்கல்களை அமைதியான முறையில் தீர்த்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்தல் ஆகிய கொள்கைகளில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.