அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை சூறையாடி வரும் கடும் பனிப்புயல் காரணமாக, நாடு முழுவதும் 84,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சார விநியோகத்தைக் கண்காணிக்கும் ‘PowerOutage.com’ இணையதளத்தின் தரவுகளின்படி, பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டெக்சாஸ் மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 43,000-க்கும் அதிகமான பாவனையாளர்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளனர்.

லூசியானாவில் 6,000 குடும்பங்களும், ஆர்கன்சாஸ்சில் 5,000 குடும்பங்களும் கலிபோர்னியாவில் சுமார் 4,000 குடும்பங்களும் மின்சார விநியோகமின்றித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதிவாகியுள்ள அனைத்து மின்வெட்டுகளுக்கும் இந்தப் பனிப் புயல் தான் நேரடிக் காரணமா என்பது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், புயலினால் மின் விநியோகக் கட்டமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்களும் அதிகாரிகளும் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் சீரமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அந்தந்த மாநில காவல்துறையினர் மற்றும் அவசரக்காலப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சினிமா