டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்து எமது செய்திச் சேவை துறைசார்ந்த அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளிடம் இன்று வினவியது
இந்த நிலையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் தமது நிலையத்தின் கீழ் முன்னெடுக்கப்படவில்லை என அனர்த்த நிவாரண சேவைக்கான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதேநேரம், பெருந்தோட்டத் துறைசார் அமைச்சின் கீழ் அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த நிலையம் எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டது.
எனினும், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட வீடமைப்புத் திட்டம் தயார் செய்யப்படவில்லை என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு திட்டத்தினூடாகவே அவர்களுக்கான வீடுகள் கையளிக்கப்படும் என அவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.