கொழும்பு, கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையில் இன்று (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 2:35 அளவில் உந்துருளியொன்றில் வந்த இருவர், அங்கிருந்த ஒரு கட்டடம் மற்றும் அதன் நுழைவாயிலை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ரீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுமார் 16 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிதறிக்கிடந்த வெற்றுத் தோட்டாக்களின் அடிப்படையில், கொள்ளுப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, உந்துருளியின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஒரே நேரத்தில் கட்டடம் மற்றும் வாயிலை நோக்கி சுடுவதைக் காணக்கூடியதாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.