ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷஹித் அஃப்ரிடியின் கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) மறுப்பு தெரிவித்தது.
இதனால், பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சேர்த்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அஃப்ரிடி, மீண்டும் இந்தியாவை இந்த விவகாரத்திற்குள் இழுத்துள்ளார்.
தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அஃப்ரிடி பதிவிட்டதாவது,”ஐசிசியின் பாரபட்சமான செயல் ஏமாற்றம் அளிக்கின்றது.
2025 செம்பியன்ஸ் கிண்ண தொடருக்காக பாகிஸ்தான் வர இந்தியா மறுத்தபோது, அவர்களின் பாதுகாப்பு கவலையை ஏற்றுக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் பேரவை, பங்களாதேஷின் விடயத்தில் மட்டும் ஏன் அதே புரிதலைக் காட்டவில்லை?சர்வதேச கிரிக்கெட் பேரவை பாலங்களை அமைப்பதற்குப் பதிலாக, அதை எரித்துக் கொண்டிருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) ஆதரவாகவும், ஏனைய கிரிக்கெட் சபைகளுக்கு எதிராகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை செயற்படுவதாக அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பங்களாதேஷின் குற்றச்சாட்டுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் 3 வாரங்களுக்கும் மேலாக நேரடியாவும், நிகழ்நிலை மூலமும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பங்களாதேஷ் வீரர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ இந்தியாவில் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை.
அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே, போட்டி அட்டவணையை மாற்ற முடியாது என்ற முடிவு எடுக்கப்பட்டது என சர்வதேச கிரிக்கெட் பேரவை விளக்கமளித்துள்ளது.
அஃப்ரிடியின் இந்த கருத்து தேவையற்றது என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷின் முடிவிற்கும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அரசியல் சூழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அஃப்ரிடி வேண்டுமென்றே இந்த பிரச்சினையைத் திசை திருப்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள நிலையில், அஃப்ரிடியின் கருத்து வீண் பதற்றத்தை உருவாக்குவதாகப் பார்க்கப்படுகின்றது.