BREAKING NEWS

தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை: தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை

PR
priya priya punidha in Latest Updates
Report
தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை: தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை

தொடருந்து திணைக்களத்தில் நிலவி வரும் நிருவாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், தமக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள தொழிற்சங்க உரிமைகளைப் பயன்படுத்திப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தொடருந்து திணைக்களத்தின் தொடர்ச்சியான நிருவாகத் திறமையின்மை காரணமாக பயணிகள் மட்டுமன்றி, ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். 

நிலைய அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பான இடைக்கால விதிமுறைகளை அமுல்படுத்துவதில் நிலவும் தாமதம், ஊழியர்களின் வேலைத்திறனையும் மனநிலையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. 

அரச ஊழியர்களுக்கான அனர்த்தக் கடனை அரசாங்கம் 400,000 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், தொடருந்து திணைக்களம் அதனை 250,000 ரூபாவாகக் குறைத்து வழங்கத் தீர்மானித்துள்ளது. 

இது அரசாங்கத்தின் தீர்மானத்தை அவமதிக்கும் செயல் எனவும், ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

முறையற்ற பயணத் திட்டமிடல் மற்றும் தொடருந்து நேர அட்டவணைகளில் நிலவும் குளறுபடிகளால் பயணிகள் நாளாந்தம் பாதிப்படைகின்றனர். 

இதற்குத் திணைக்கள நிருவாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.