சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து நிர்ணயித்த 358 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி 304 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணித் தலைவர் ஹரி புரூக் ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த தோல்வியின் ஊடாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை நேற்று (27) இழந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணி ஒருநாள் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருந்து 6 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, இதுவரை 6 ஆவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணி 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், இங்கிலாந்து அணி தொடர்ந்தும் 8வது இடத்திலேயே நீடிக்கிறது.
உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
அத்துடன், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும் மூன்றாம் இடத்தில் அவுஸ்திரேலியாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.