மேல் மற்றும் தென் மாகாணங்கள் வழியாகவே அதிகமாக போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுகிறது. அதனால் கொழும்பு மற்றும் காலி மாவட்டத்தில் இதனை கட்டுப்படுத்தினால் ஏனைய மாவட்டங்களில் இலகுவில் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கிராம மற்றும் மாவட்ட மட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் குழுக்களை அமைக்கும் வேலைத்திடம் நேற்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் போதைப்பாெருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸாருடன் முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நடவடிக்கையில் இருந்துவந்த உற்சாகம் குறைவடைந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அவ்வாறு இருக்க முடியாது.
கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும். இந்த விடயத்தில் விளையாட முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் தெஹிவளை, கல்கிஸை பிரதான மர்மஸ்தானங்களாகும். இவ்வாறு போதைப்பொருள் மர்மஸ்தானங்களை இனங்கண்டு, அந்த பிரதேசங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
அதனால் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி சுற்றுச்சூழல் பொலிஸாரை பலப்படுத்தி இதில் ஈடுபடுத்த தீர்மானித்திருக்கிறோம். அதனால் போதைப் பொருள் ஒழிப்பு விடயத்தில் கொழும்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக காட்டுவதற்கு சுற்றுச்சூழல் பொலிஸாரின் நடவடிக்கை இருக்க வேண்டும்.
அதேநேரம் கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை நீதிமன்றில் ஒப்படைத்து, வழக்கு விசாரணை முடிவடையும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல், குறுகிய நாட்களுக்குள் அதனை அழித்துவிட முடியுமான வகையில் சட்டம் கொண்டுவந்து, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம் என்றார்.