இந்த ஆண்டு முதல் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் உள்வாங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டு வரை படிப்படியாக இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெற்ற முதலாம் தரம் மாணவர்களை வரவேற்கும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
முதலாம் தரத்தில் பாடசாலைக்கு நுழையும் உங்களுக்கு, நாம் தோல்வியடையாத ஒரு கல்வி முறையைப் பரிசாக வழங்குகிறோம்.
13 வருடக் கல்வியின் பின்னர் நீங்கள் ஒரு திறமையான வெற்றியாளராகவே வெளியேறுவீர்கள் எனப் பிள்ளைகளிடம் பிரதமர் உறுதியளித்தார்.
ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் சுமையைக் குறைப்பதில் ஆரம்பித்து, எவ்வித அழுத்தமுமின்றிப் பாடசாலைக் கல்வியைத் தொடரக்கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பிள்ளைகளுக்குக் கல்வியை மட்டுமன்றி அன்பையும் அரவணைப்பையும் வழங்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், இந்தச் சீர்திருத்தங்களின் வெற்றி ஆசிரியர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும், அவர்களது தொழில்சார் கௌரவம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உங்கள் பிள்ளைகளின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. உங்கள் பணப்பையின் அளவைப் பொறுத்து பிள்ளைகளின் கல்வி தீர்மானிக்கப்பட மாட்டாது.
தரமான கல்வியை வழங்குவது ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் எனப் பிரதமர் பெற்றோர்களிடம் உறுதியளித்தார்.
கனவுப் பாடசாலை என்ற திட்டத்தை யதார்த்தமாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.