மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொரலஸ்கமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி, டிக்டொக் ஊடாகப் பழகிய தனியார் வங்கி உதவியாளர் ஒருவரைச் சந்தித்த சந்தேகநபர், கொழும்பிலுள்ள ஒரு உணவகத்தில் வைத்து அவருக்கு இரகசியமாக மயக்க மருந்துகளை வழங்கியுள்ளார்.
பின்னர் அவரை பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த தங்க நகைகள் மற்றும் வங்கி அட்டையைப் பயன்படுத்தி 258,000 ரூபா பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பன்னிபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 5 மயக்க மாத்திரைகள் மற்றும் சில பணத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.
இதே போன்று மற்றுமொரு தனியார் நிறுவன அதிகாரியை மயக்கமடையச் செய்து கொள்ளையடித்தமையையும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு இரண்டு நபர்களிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதியைச் சந்தேகநபர் ஆடம்பர வாழ்க்கை வாழப் பயன்படுத்தியுள்ளார்.
கோபித்துச் சென்ற தனது நெருங்கிய நண்பரை மீண்டும் இணைத்துக்கொள்வதற்காக, வத்தளை பகுதியிலுள்ள ஒரு பூசகருக்கு சுமார் 10 இலட்சம் ரூபாவை வழங்கியதாகச் சந்தேகநபர் கூறியுள்ளார்.
விசாரணைகளின் படி, பல்வேறு நபர்களுடன் பழகி இவ்வாறு கொள்ளையடித்த பணத்திலிருந்து இதுவரை சுமார் 30 இலட்சம் ரூபா வரை அந்தப் பூசகருக்கு அவர் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட நகைகள் சிலவற்றை நீர்கொழும்பு மற்றும் கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைகளில் சந்தேகநபர் விற்பனை செய்துள்ளார்.
அவரை அடையாள அணிவகுப்பிற்காக நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொரலஸ்கமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.