இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க,ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோரின் பங்குபற்றலுடன் 2026.01.27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பல்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது துறைசார்ந்த பிரச்சினைகள் குறித்துக் குழுவிற்கு விளக்கமளித்தனர். இதன்போது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு
நீண்டகால தேசியக் கொள்கை இல்லாததால் தமது கைத்தொழில் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சுட்டிக்காட்டிய அவர்கள், வலுவான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
அத்துடன், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தற்போதுள்ள ஒழுங்குமுறைகளை தளர்த்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிகளை மீளாய்வு செய்தல், வருமான வரிக்கு பாதுகாப்பான துறைமுக விதிகளை அறிமுகப்படுத்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான சேர்பெருமதி வரி (VAT) சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், முறைசாரா வகையில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமது கைத்தொழிலை மேம்படுத்த முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், இரத்தினக்கல் அகழ்வின் போது ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்காமை மற்றும் தற்போதுள்ள அகழ்வு நிலங்கள் குறைந்து வருவதால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகள் தொடர்பிலும் அந்தத் தொழிற்துறையினர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், தாராளமயமாக்கல் (வரி மற்றும் பௌதீக), நிர்வாகம் மற்றும் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கொள்கை விடயங்கள் போன்ற பிரதான துறைகள் தொடர்பில் தொழித்துறையினுள் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் காண முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த விடயங்களை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து விரிவான கலந்துரையாடல் ஆவணமொன்றைத் தயாரித்து, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் வினைத்திறனான தொடர் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகக் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.