2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை(ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

அதன்படி, தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளுக்காக 24 கள நடுவர்கள் மற்றும் 6 போட்டி மத்தியஸ்தர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 

இருப்பினும், சூப்பர் 8 மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் ஆரம்பப் போட்டியில் கடமையாற்ற இலங்கையின் அனுபவம் வாய்ந்த நடுவர் குமார் தர்மசேன மற்றும் வெய்ன் நைட்ஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

வெய்ன் நைட்ஸ் நடுவராகப் பணியாற்றும் முதலாவது டி20 உலகக் கிண்ணத் தொடர் இதுவாகும், அத்துடன் இது அவர் நடுவராகப் பணியாற்றும் 50ஆவது சர்வதேச டி20 போட்டியாகும். 

1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த குமார் தர்மசேன, இதுவரை 2016 மற்றும் 2022 இறுதிப் போட்டிகள் உட்பட 37 டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 

பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டிக்கு குமார் தர்மசேன மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கொல்கொத்தாவில் நடைபெறவுள்ள ஸ்கொட்லாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டிக்கு நிதின் மேனன் மற்றும் சாம் நோகாஜ்ஸ்கி ஆகியோர் நடுவர்களாகச் செயல்படுவர். 

பெப்ரவரி 7-ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள இந்தியா – அமெரிக்காவுக்கு இடையிலான போட்டிக்கு பால் ரிஃபெல் மற்றும் ரொட் டக்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ரொட் டக்கர் இதுவரை 46 டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளதுடன், இந்தத் தொடரின் போது தனது 50ஆவது போட்டியைப் பூர்த்தி செய்யவுள்ளார். 

2026 டி20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி மத்தியஸ்தர்களாக (Match Referees) ரஞ்சன் மடுகல்ல, டீன் கோஸ்கர், டேவிட் கில்பர்ட், எண்ட்ரூ பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

மேலும், நடுவர்களாக (Umpires) குமார் தர்மசேன, ரவீந்திர விமலசிறி, ரோலண்ட் பிளாக், கிறிஸ் பிரவுன், கிறிஸ் காபனி, ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, வெய்ன் நைட்ஸ், டொனோவன் கொக், ஜெயராமன் மதன்கோபால், நிதின் மேனன், சாம் நோகாஜ்ஸ்கி, கே.என்.ஏ. பத்மநாபன், அலாவுதீன் பலேகர், அஹ்சன் ராசா, லெஸ்லி ரீஃபர், பால் ரிஃபெல், லாங்டன் ருசேரே, ஷர்புத்தௌலா இப்னு ஷாஹித், காஜி சோஹைல், ரொட் டக்கர், அலெக்ஸ் வார்ஃப் மற்றும் ஆசிப் யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சினிமா