BREAKING NEWS

பாம்புக்கடியினால் ஏற்படும் மரணங்களில் பாதியளவு இந்தியாவில் நிகழ்வதாகத் தரவுகள்

PR
priya priya punidha in Latest Updates
Report
பாம்புக்கடியினால் ஏற்படும் மரணங்களில் பாதியளவு இந்தியாவில் நிகழ்வதாகத் தரவுகள்

உலகளவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மரணங்களில் பாதியளவு இந்தியாவில் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக ‘குளோபல் ஸ்நேக்பைட் டாஸ்க்ஃபோர்ஸ்’ வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, சிகிச்சையளிப்பதில் உள்ள பாரிய குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்திய அரசின் கணக்குப்படி ஆண்டுதோறும் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். 

எனினும், 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று, 2000-2019 காலப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 58,000 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிடுகிறது. 

உலக சுகாதார நிறுவனம் பாம்புக்கடியை “மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்” என வகைப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் 99 வீத சுகாதாரப் பணியாளர்கள் நச்சுமுறிவு மருந்தை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

பல சுகாதாரப் பணியாளர்களுக்கு நச்சுமுறிவு மருந்தை எவ்வாறு பாதுகாப்பாக வழங்குவது என்பது குறித்த முறையான பயிற்சி இல்லை. 

மருந்தினால் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினைகளை கையாளும் வசதிகள் கிராமப்புற மருத்துவமனைகளில் இல்லை. 

பாம்பு நச்சு சில நிமிடங்களிலேயே இரத்தத்தில் கலந்து நரம்பு மண்டலம் அல்லது சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது. 

ஆனால், மோசமான சாலைகள் மற்றும் நோயாளர் காவு வண்டி வசதி இல்லாமையினால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வரத் தாமதமாகிறது. 

கிராமப்புறங்களில் மக்கள் முதலில் நாட்டு வைத்தியம் அல்லது மந்திரவாதிகளை நாடுவதும் மரணங்கள் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாகும். 

இந்தியாவில் தற்போது கிடைக்கும் நச்சுமுறிவு மருந்து நான்கு முக்கிய வகை பாம்புகளுக்கு (நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன்) எதிராக மட்டுமே செயல்படுகிறது. 

ஆனால், இந்தியாவில் இன்னும் பல நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் (உதாரணமாக: பிட் வைப்பர் வகைகள்) உள்ளன. 

அவற்றுக்கென பிரத்யேக நச்சுமுறிவு மருந்துகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. பாம்புக்கடி மரணங்களை 2030 ஆம் ஆண்டிற்குள் பாதியாகக் குறைக்க இந்திய அரசு ‘தேசிய செயல் திட்டம்’ ஒன்றைத் தொடங்கியுள்ளது. 

அண்மையில் கர்நாடக அரசு, பாம்புக்கடியை “அறிவிக்கப்பட வேண்டிய நோய்” என அறிவித்துள்ளது. 

இது மரணங்கள் மற்றும் பாதிப்புகளைத் துல்லியமாகப் பதிவு செய்ய உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.