BREAKING NEWS

78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா? விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா?

PR
priya priya punidha in Latest Updates
Report
78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா?  விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா?

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார்.

78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.