ஐசிசி ஆடவர் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 27 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 10 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த குல்பதின் நைப் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். அவர் 35 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய செடிகுல்லா அதல் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதிக்கட்டத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் 7 பந்துகளில் 14 ஓட்டங்களையும், மொஹமட் நபி 10 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் லொக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேட் ஹென்றி மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். மிட்செல் சான்ட்னர் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 23 ஓட்டங்களை மாத்திரமே வழங்கி சிக்கனமாகப் பந்துவீசினார்.
நியூசிலாந்து அணி தனது வெற்றிக்காக 20 ஓவர்களில் 183 ஓட்டங்களை எடுக்க வேண்டிய சவாலான இலக்குடன் களமிறங்கவுள்ளது.