BREAKING NEWS

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு அச்சத்தில்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
மத்திய கிழக்கில் போர் பதற்றம் – 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு அச்சத்தில்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்ச நிலை காரணமாக அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் வரையில் கிடைத்துள்ள மதிப்பீட்டு தகவல்களின் படி, மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தமாக 10 லட்சத்து 7 ஆயிரத்து 855 இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.

அதிக அளவில் இலங்கையர்கள் வசிக்கும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் முன்னிலையில் உள்ளது. அங்கு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்.சவுதி அரேபியாவில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 139 பேரும், குவைத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேரும் உள்ளனர்.

கட்டாரில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், ஓமனில் 32 ஆயிரம் பேரும் வசித்து வருகின்றனர்.இஸ்ரேலில் 30 ஆயிரம் பேரும், ஜோர்தானில் 14 ஆயிரத்து 500 பேரும், பஹ்ரேனில் 13 ஆயிரத்து 130 பேரும் வாழ்கின்றனர்.

மேலும், லெபனானில் 7 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் குண்டு தாக்குதல்கள் காரணமாக, குறிப்பாக இஸ்ரேல், லெபனான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் அதிகரித்துள்ளது.

சில நாடுகளில் இலங்கையர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். ஈரானில் 35 பேரும், சிரியாவில் 20 பேரும், யேமனில் 27 பேரும், பாலஸ்தீனில் 4 பேரும் பதிவாகியுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்கி வரும் இவர்கள், பிராந்திய அமைதியின்மை காரணமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரகங்கள் நிலைமையை கவனித்து வருவதாகவும், அவசர கால தொடர்பு எண்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.